மிசோரம் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் புதன் கிழமை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே மற்றும் காவல்துறையினர் கூறுகையில், "இடிபாடுகளில் இருந்து இதுவரை 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஃக்கு பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ள நான்கு பேரின் உடல்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளனர்.
மிசோரம் மாநில தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ள சாய்ராங் என்னும் இடத்தில் கட்டப்பட்டுவரும் ரயில்வே மேம்பாலம், பணியின்போது புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு இடிந்து விழுந்தது. வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கும் ரயில்வே திட்டத்தின் படி கட்டப்பட்டு வரும் 130 மேம்பாலங்களில் ஒன்றான பைரவி - சாய்ராங் இடையே கட்டப்பட்டுவரும் பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் உயர்மட்டக்குழு அமைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் X தளத்தில் அறிக்கைகள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“மிசோரமில் பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன,” என்று பிரதமர் அலுவலகம் கூறியது. மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும், என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக