தெற்கு ரயில்வேக்கு ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயிலை, ரயில்வே வாரியம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த ரயிலை தென் மாவட்டங்களுக்கு இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயிலானது, சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.,பில் சமீபத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது ஆகும்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வே, கிழக்கு கடற்கரை ரயில்வே, மேற்கு ரயில்வேக்கு தலா ஒரு வந்தே பாரத் ரயில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பயணியர் தேவை அதிகமாக உள்ள சென்னையில் இருந்து தென்மாவட்ட தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இவை தலா எட்டு பெட்டிகள் கொண்டதாக இருக்கும்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள, 740 கி.மீ., வழித்தடத்தில் சென்னை - திருநெல்வேலி இடையே முழுதும் மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகல ரயில் பாதை உள்ளது. இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க ஏற்கனவே வாரியத்திற்கு பரிந்துரை செய்துள்ளோம். இருப்பினும், தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயிலை, எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து பயணியர் கூறியதாவது: வசதிகள் உள்ள புதிய ரயில்களை சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு மட்டுமே இயக்குகின்றனர். தமிழகத்தின் உள்பகுதிகளை இணைக்கும் வகையில், வந்தே பாரத் போன்ற ரயில் சேவை தென் மாவட்டங்களுக்கு இல்லாதது ஏமாற்றம் தருகிறது. எனவே, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் சேவையை துவங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள்
கருத்துரையிடுக