ஹைதராபாத் <=> செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில் வழி சிவகாசி, பழனி, கோவை , திருப்பதி
வெளியீடு செப்.24, 2026.
ஐதராபாத்–செங்கோட்டை இடையே சிவகாசி, பழனி மற்றும் கோவை வழியாக சிறப்பு வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டா, மிரியாலகுடா, குண்டூர், தெனாலி, பாப்பட்லா, சிராலா, ஒங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, காட்டுப்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை (போத்தனூர்), பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டைக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வரும் 2-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 27-ந்தேதி வரை வாராந்திர சிறப்பு ரயிலாக இது இயக்கப்படுகிறது.
காலை 7.15 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும் வகையில் பயண அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அதே நாளில் மாலை 5.30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் மதியம் ஐதராபாத் செல்கிறது.
தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து திருப்பதி, ஐதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு செல்ல போதிய ரயில் வசதிகள் இல்லாத நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில் தென்மாவட்ட பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக தென்காசி, விருதுநகர் மாவட்ட மக்கள் திருப்பதி செல்ல போதிய ரயில் இல்லாமல் இருந்து வந்தனர். தற்போது இந்த ரயில் மூலம் திருப்பதி, பழனி, மதுரை, தென்காசி ஆகிய கோவில் நகரங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், சிவகாசி** ஆகிய தொழில் நகரங்களுக்கும் சென்று வர மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போது சிறப்பு ரயிலாக அறிவிக்கப்பட்டாலும், வரும் காலத்தில் இந்த ரயில் வாராந்திர ரயிலாக தொடர்ந்து இயக்க வாய்ப்பு உள்ளது என்று பயணிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக